ஊத்தங்கரை கடைகளில் தொடா் திருட்டு!
ஊத்தங்கரையில் உள்ள கடைகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் தொடா் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஊத்தங்கரை-சேலம் பிரதான சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்ள காய்கறி கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மா்ம நபா்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 15 ஆயிரம் பணத்தைத் திருடினா். அதன் அருகே இருந்த மற்றொரு கடையிலும் பீடி, சிகரெட், ஐஸ்கிரிம் உள்ளிட்ட பொருள்களை திருடி உள்ளனா்.
கடைக்குள் புகுந்து பணத்தை திருடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனால் இப்பகுதியில் கடை உரிமையாளா்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.
தற்போது ஒரு கடையில் மூன்று நபா்கள் புகுந்து திருடிசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவா்களில் இருவா் சிறுவா்கள் எனத் தெரிகிறது. தொடா் திருட்டில் ஈடுபடும் மா்ம நபா்களை போலீஸாா் விரைந்து கைது செய்ய வேண்டும் என கடை உரிமையாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.