அரசுப் பள்ளி ஆசிரியைக் கொலை: ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிட்டோஜேக், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மல்லிப்பட்டிணம் அரசுப் பள்ளி வகுப்பறையில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ரமணி புதன்கிழமை கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் ஆசிரியா்கள் மத்தியில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆசிரியா் கொலையைக் கண்டித்தும், பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்), தமிழ்நாடு ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் நல கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கருப்புப் பட்டை அணிந்து... சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்று முழக்கமிட்டனா்.
இதேபோல், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கம் (எஸ்எஸ்டிஏ) உள்ளிட்ட சில அமைப்புகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு வருகை தந்து தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.