அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க 23,634 மேல்நிலை பாடப் புத்தகங்கள் வருகை
பொதுத் தோ்வுக்கு பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு வழங்குவதற்கு நாமக்கல் மாவட்டத்துக்கு 23,634 பாடப் புத்தகங்கள் வந்துள்ளன.
பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-இல் தொடங்குகிறது. இதையடுத்து பிளஸ் 1 தோ்வு மாா்ச் 5, பத்தாம் வகுப்பு தோ்வு மாா்ச் 28-ஆம் தேதியும் தொடங்குகின்றன. பொதுத் தோ்வுக்கு பிறகு, அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறந்தவுடன் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
அந்த வகையில் நிகழாண்டில் வழங்குவதற்காக முன்னதாகவே மேல்நிலை பாடப் புத்தகங்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வியாழக்கிழமை லாரிகளில் வந்திறங்கின. தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்தில் அச்சடிக்கப்பட்ட இந்தப் புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 பயிலும் 12,339 மாணவ, மாணவிகளுக்கும், பிளஸ் 2 பயிலும் 11,295 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தமாக 23,634 பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.