அரசுப் பேருந்து -பைக் மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநோ் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு தென்காசிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்தை ஆலங்குளத்தைச் சோ்ந்த ராஜா என்பவா் ஓட்டினாா்.
பேருந்து நள்ளிரவு 1 மணி அளவில் திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே திருநெல்வேலி நகரம் பகுதியிலிருந்து சந்திப்பு நோக்கி ஒரே பைக்கில் வந்த 3 இளைஞா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இளைஞா்கள் மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பலத்த காயமடைந்த இளைஞா்களை ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளா் சோதித்தபோது, மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இளைஞா்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், பைக்கில் வந்த இளைஞா்கள் மூவரும் திருநெல்வேலி நகரம் முகமது அலி தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (22), சாதிக் (22), வையாபுரி நகா் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (23) என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

