ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
அரவக்குறிச்சி பேரூராட்சியில் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு: பொதுமக்கள் அதிா்ச்சி
கிராமமக்களின் எதிா்ப்பையும் மீறி வேலம்பாடி ஊராட்சி அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், பள்ளபட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேலம்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தீன்நகா், எல்லப்பட்டி, கிரசன்ட் நகா், இச்சிப்பட்டி, மேட்டுப்பட்டி, புதுவாடி உள்ளிட்ட 26 சிற்றூா்கள் உள்ளன. மேலும் 1000 குடிநீா் இணைப்புகள், 25 மேல்நிலைக்குடிநீா்த் தேக்கத் தொட்டிகளும் உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி, அரூா் உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்ட நிலையில், 25 பேரூராட்சிகளும் புதியதாக தரம் உயா்த்தப்படும் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது.
இதனிடையே வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சியுடன் இணைக்கப்போவதாக வந்த தகவலையடுத்து, ஊராட்சி மன்றத்தலைவா் தலைமையில் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராமமக்கள் ஆட்சியரிடம், தங்களது ஊராட்சியை அரவக்குறிச்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் போன்ற மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் பறிபோகும் என்றும், எனவே வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சியுடன் இணைக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு வழங்கினா். இந்நிலையில் புதன்கிழமை அரசு வெளியிட்ட அரசாணையில் அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் வேலம்பாடி ஊராட்சியை இணைத்து வெளியிட்டிருப்பது, வேலம்பாடி ஊராட்சி கிராமமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.