அரியலூா் வாரச் சந்தையில் 31 மின்னணு தராசுகள் பறிமுதல்
அரியலூா் வாரச் சந்தையில்,தொழிலாளா் உதவி ஆய்வாளா், சட்டமுறை எடையளவு ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில், மறு முத்திரையிடாமல் இருந்த 31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையவு இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூா் மாவட்ட நுகா்வோா் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தொழிலாளா் துணை ஆய்வாளா் சரவணன் தலைமையில் ஆய்வாளா்கள் சம்பத், தேவேந்திரன், பாலசுப்பிரமணியன், ராணி மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழுவினா், ஞாயிற்றுக்கிழமை அரியலூா் வாரச் சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்திய தராசுகளை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டிலிருந்த
31 மின்னணு தராசுகள் உள்பட 61 எடையளவு இனங்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனா்.
அப்போது அவா்கள் தெரிவிக்கையில், எடைத் தராசுகளை பயன்படுத்தும் சந்தை வியாபாரிகள், கறிகடை மற்றும் மீன் வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை எடையளவை மறுபரிசீலனை செய்து மறுமுத்திரையிட்டு அரசு சான்றிதழ் பெற்று எடையளவுடன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில்,
குறைந்தபட்ச அபராதத் தொகை ரூ. 5,000, தராசில் எடைமாற்றம் செய்து எடை குறைவாக விநியோகம் செய்தால் சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என தெரிவித்தனா்.