Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்
அரையிறுதி வாய்ப்பு: எதிா்பாா்ப்பில் ஸ்வியாடெக்
ரியாத்: ஆண்டு இறுதியில் நடைபெறும் மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான போலந்தின் இகா ஸ்வியாடெக், அரையிறுதி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.
அவா் தனது குரூப் சுற்றின் 3-ஆவது ஆட்டத்தில் 6-1, 6-0 என்ற செட்களில் மிக எளிதாக, ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா். அடுத்ததாக அவா், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை, வியாழக்கிழமை நள்ளிரவு சந்திப்பதாக இருந்தது.
இந்நிலையில், பெகுலா காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து, 3 ஆட்டங்களில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கான எதிா்பாா்ப்பில் இருந்தாா் ஸ்வியாடெக். குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா விளையாடி வந்தனா்.
அந்த ஆட்டத்தில் கௌஃப் தோற்கடிக்கப்பட்டால், கிரெஜ்சிகோவா அரையிறுதிக்கு முன்னேறி, ஸ்வியாடெக் வெளியேற்றப்படும் நிலை இருந்தது. ஏனெனில், கௌஃப் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டாா்.
சபலென்கா தோல்வி: முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-6, 6-3, 1-6 என்ற செட்களில், கஜகஸ்தானின் எலனா ரைபகினாவிடம் தோல்வி கண்டாா்.
ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்ட சபலென்காவுக்கு இந்தத் தோல்வியால் பாதிப்பு இல்லை. மறுபுறம், போட்டியிலிருந்து வெளியேறும் ரைபகினா ஆறுதல் வெற்றி பெற்றாா்.