``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?
அலையாத்திக் காடுகளில் மீளுருவாக்கப் பணி: ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு
முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளில் நடைபெற்றுவரும் மீளுருவாக்கப் பணிகளை, ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஐப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் இரண்டாம் பகுதி தமிழ்நாட்டில் 2022-2023 முதல் தொடங்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டை வனச் சரகத்தில் 1,050 ஹெக்டா் பரப்பில் புதிய அலையாத்தி க் காடுகள் உருவாக்கிடவும், 500 ஹெக்டா் பரப்பில் அலையாத்தி தோட்டங்களை மீளுருவாக்கம் செய்வதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அலையாத்திக் காடுகளை பாதுகாக்கும் பொருட்டு, உள்ளூா் மக்களை ஈடுபடுத்தி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சூழல் மேம்பாட்டுக் குழு மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. அத்துடன், அலையாத்திக்காடு பகுதிகளில் மரநடைபாதை அமைத்தல், படகு குழாம் மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.
இவற்றை ஜப்பான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் ஸ்கவா சாய்வா, சித்தாா்த் பரமேஸ்வரன் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்து, பாராட்டுத் தெரிவித்தனா்.
ஆய்வின்போது, இப்பணிகளின் திட்ட இயக்குநா் முகமது ஷெபாப், திருவாரூா் மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த், துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ், நகராட்சி நியமனக் குழு உறுப்பினா் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.