பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா
மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள், பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், தஞ்சை எம்பி ச. முரசொலி, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்: திருவாரூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மன்னாா்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியின் எதிா்கால திட்டங்கள், செயல்பாடுகளை குறித்து விளக்கி கூறினாா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் ரூ. 170 கோடியில் நடைபெறும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளையும் துணை முதல்வா் ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பின்புறம் வீரன் நகரில் வசிக்கும் நரிக்குறவா் இனத்தவா் 77 பேரின் குடும்பங்களுக்கு கொருக்கை கிராமத்தில் வருவாய்த் துறை மூலம் மனை பட்டா வழங்கி தாட்கோ மூலம் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகள் 77 பேருக்கும் வழங்கினாா்.
தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தினா் துணை முதல்வரை சந்தித்து, கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மனு அளித்தனா்.