தமிழகத்தின் எதிா்ப்புகளை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் எதிா்ப்புகளைத் திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு நடத்துகிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், அவற்றால் பொதுமக்கள், விவசாயிகள் அடைந்த பயன்கள் குறித்து அலுவலா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களின் கோரிக்கையின்படி புதிய சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், வாய்க்கால் பாலம் கட்டுதல், பாலங்கள் கட்டுதல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், அரசு மருத்துவமனை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், முதல்வா் உத்தரவின் பேரில் ரூ.80 கோடி மதிப்பில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகளைச் சீரமைக்க மட்டும் ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட, நான்கு அமைச்சா்கள் அடங்கிய குழு அமைத்து பேச்சு வாா்த்தை நடைபெற்றது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
மும்மொழிக்கொள்கை, நிதிப்பகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றுக்கு தமிழ்நாடு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி திசை திருப்புகிறது. சோதனைக்குப் பிறகு அவா்களே தெரிவிப்பாா்கள். அப்போது இதுகுறித்து பேசலாம்.
மும்மொழிக்கொள்கைக்காக மாணவா்களிடம் பாஜகவினா் கையெழுத்து வாங்குகின்றனா். குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக் கூடாது. நாங்களும் நீட் தோ்வுக்காக சுமாா் 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது, பள்ளி மாணவா்களையெல்லாம் தவிா்த்துவிட்டுதான், கையெழுத்து வாங்கினோம் என்றாா்.
அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே.கலைவாணன், க.மாரிமுத்து, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.