'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains
அழுது வீடியோ வெளியிட்ட CRPF பெண் காவலர்; "தாமதமாக FIR போட்டதாகச் சொல்வது பொய்" - நடந்தது என்ன?
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள பொன்னை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மகள் கலாவதி (வயது 32), ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் காவலராக தேசப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி மாலை 3.30 மணியளவில், கலாவதியின் பெற்றோர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றபோது, அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 22.5 பவுன் நகைகள், ரூ.50,000 ரொக்கப் பணம், பட்டுப்புடவை உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அன்று இரவே, திருட்டுச் சம்பந்தமாக பொன்னை காவல் நிலையம் சென்றும் புகாரளித்திருக்கின்றனர்.

ஆனால், ``மறுநாள் (ஜூன் 25) முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் வருகை தந்த காரணத்தினால், `பந்தோபஸ்து டூட்டி’ எனச் சொல்லி, காவல்துறையினர் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. அதன்பிறகு, ஜூன் 28-ம் தேதிதான் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.
ஆனாலும், இதுவரை கொள்ளையர்கள் குறித்த எந்தத் தகவலும் எங்கள் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவில்லை. கொள்ளைப்போன நகைகளும், பொருள்களும் என்னுடைய திருமணத்துக்காக வாங்கப்பட்டவை. போலீஸார் என்னுடைய நகைகளை மீட்டுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடி, சீருடையில் சி.ஆர்.பி.எஃப் பெண் காவலர் கலாவதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவை பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்ததால் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
இது குறித்து, பொன்னை காவல் நிலையப் போலீஸாரிடம் விளக்கம் கேட்டபோது, ``ஜூன் 24-ம் தேதி கம்ப்ளைன்ட் வந்தது. மறுநாள் 25-ம் தேதி உடனே எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டோம். அவரின் அப்பா குமாரசாமிதான் எஃப்.ஐ.ஆர் காப்பியை வாங்கிச் சென்றவர். அவர்கள் சந்தேகப்படக்கூடிய 12 பேரிடம் கைரேகை பதிவு செய்திருக்கிறோம்.
அவை எதுவும் பொருந்தவில்லை. அவரின் அம்மாவின் கைரேகை தான் இருக்கிறது. கைரேகை நிபுணரும் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். CDR (அழைப்பு விவரப் பதிவேடு) மற்றும் டவர் டம்ப் (செல் டவர்களின் தொகுப்பிலிருந்து மொபைல் போன் தரவைப் பிரித்தெடுத்து பகுப்பாய்வு செய்வது) போட்டிருக்கிறோம்.

80 சதவிகித விசாரணையை முடித்துவிட்டோம். முடிவாக 10 சதவிகிதம்தான் விசாரணை இருக்கிறது. இன்னும் 4 பேரைச் சந்தேகப்படுகிறோம். அவர்களையும் பிடித்து விசாரிக்கப் போகிறோம். அவர்கள்தான் திருடினார்கள் என்றால், நகைகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளைக் கைது செய்வோம்.
வீடியோவில் அந்தப் பெண் காவலர் தனக்குத் திருமணமாகவில்லை எனப் பொய் சொல்கிறார். அவர் ஏற்கெனவே திருமணமானவர். கணவர் சந்தோஷை விவகாரத்து செய்துவிட்டு, பெற்றோர் ஆதரவில் இருக்கிறார். தனது முன்னாள் கணவர்தான் நகை, பணத்தைத் திருடியிருப்பார் எனவும் கலாவதி சந்தேகப்பட்டு, அவரைக் கைது செய்யச் சொல்கிறார்.
சந்தேகப்படக்கூடிய எல்லோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எஃப்.ஐ.ஆர் தாமதமாகப் போடப்பட்டதாகச் சொல்வதுமே பொய்’’ என்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதைப்போல, எஃப்.ஐ.ஆர் நகலை நாமும் வாங்கிப் பார்த்தோம். அதில், 25-ம் தேதியே எஃப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், `மருமகன் சந்தோஷ் மீது தான் சந்தேகமாக இருக்கிறது. அவரை விசாரியுங்கள்’ எனக் குமாரசாமி தனது புகாரில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

வேறு யார் மீதும் குமாரசாமியின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கைரேகை நிபுணர்களின் சோதனையிலும் வீட்டில் குமாரசாமியின் மனைவியின் கைரேகையைத் தவிர வேறு யாருடையதுமே பொருந்தாததும், இப்போது சி.ஆர்.பி.எஃப் காவலர் கலாவதி `தனது திருமணத்துக்கு வாங்கப்பட்ட நகைகள்’ எனச் சொல்வதும், நகைகளின் மதிப்பை தந்தை தனது புகாரில் 15 பவுன் எனக் குறிப்பிட்டிருப்பதும், காவலர் கலாவதி 22.5 பவுன் நகைகள் என மாற்றிச் சொல்வதுமே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.