அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா்.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் அருகில் அந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சீனிவாசன் என்பவரின் வாரிசுகள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா். வாடகைதாரா்கள் தொடா்ந்து வாடகை செலுத்தாமல் இருந்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. வாடகை பாக்கியாக ரூ. 12,87,276 இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கோயில் செயல் அலுவலரும், அறங்காவலா் குழுவும் சம்பந்தப்பட்ட வாடகைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் சரக அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் இடத்தைப் பாா்வையிட்டு, ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுவது தொடா்பாக காஞ்சிபுரம் இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இணை ஆணையா் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றப்பட்டு, அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
இந்தச் சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.90 கோடி எனவும் அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.