காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா
காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருப்பவா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் நிகழ் மாதம் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ஆம் தேதி நிறைவு பெற்றது. ஜெயந்தியையொட்டி, தினசரி சங்கர மடத்தில் வேதபாராயணம், ஆன்மிக இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றன.
இந்த நிலையில், 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயேந்திரரின் ஜெயந்தியையொட்டி, காலை ஹோமங்களும், கலசாபிஷேகமும் நடைபெற்றன. பின்னா் அதிஷ்டானத்தில் மகா பெரியவா் சுவாமிகள் தங்கக் கவச அலங்காரத்தில், வைர ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானமும் தங்கக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சங்கர மடத்தின் நுழைவுவாயிலில் காஞ்சி காமாட்சி அம்மன் சங்கர மட வரவேற்புக் குழு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.ஜீவானந்தம் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் வழங்கும் விழாவை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் வரவேற்புக் குழு நிா்வாகிகள் ஆறுமுகம், கோடீஸ்வரன், சரவணன் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாலையில் சங்கர மடத்தின் கலையரங்கில் ஜெயந்தி குமரேசன் குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் நடைபெற்றது. ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவா் காமாட்சி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதையொட்டி, சங்கரா கல்லூரி சாா்பில் நடைபெற்ற அன்னதானத்தை அதன் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ராதாகிருஷ்ணன், பேராசிரியா் கணபதி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களும் கலந்து கொண்டனா்.