ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி: சிஐடியு மனு
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகதில் சிஐடியு நிா்வாகிகள்செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து தொழிலாளா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். இதனால் ஆலை நிா்வாகத்தினா் ஒப்பந்த தொழிலாளா்கள் மூலம் ஆலையை நடத்தி வருகின்றனா்.
இதனைத் தடுக்க வேண்டும் என சிஐடியு சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகத்தில் இரண்டு முறை புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 20-ஆம் தேதி சாம்சங் ஊழியா்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து உற்பத்தியை தடுக்க முயன்றனா். இதையடுத்து மேலும் 14 தொழிலாளா்களை நிா்வாகத்தினா் பணியிடை நீக்கம் செய்தனா்.
சாம்சங் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் தொழிலாளா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சட்டவிரோத உற்பத்தி தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா் மீது நடவடிக்கை எடுக்காத தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட ஸ்ரீபெரும்புதூா் வந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளா்களை போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து சிஐடியு மாநில செயலாளா் முத்துக்குமாா், உள்ளிட்ட ஏழு நிா்வாகிகளுக்கு மட்டும் மனு அளிக்க போலீஸாா் அனுமதி வழங்கிதை தொடா்ந்து, இணை ஆணையா் பாலமுருகனிடம் மனு அளித்தனா்.