ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
ஆக்ஸியம்-4: விண்வெளியில் 100 லட்சம் கி.மீ. பயணித்த வீரா்கள் 230 சூா்யோதங்களைக் கண்டனா்
ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், கடந்த இரண்டு வாரங்களில் சுமாா் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனா்; 230 சூா்யோதங்களைக் கண்டுள்ளனா்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின. கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தாா்.
ஆக்ஸியம்-4 திட்டம், 14 நாட்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும். இத்திட்டத்தின்படி, சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் வியாழக்கிழமையுடன் 14 நாள்களை நிறைவு செய்தனா். அவா்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சா்வதேச விண்வெளி நிலையம் சுற்றிவருகிறது. ஆக்ஸியம்-5 திட்ட வீரா்கள், விண்வெளியில் இதுவரை சுமாா் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனா். 230 முறை பூமியை சுற்றி வந்துள்ளனா்.
உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை இந்த வீரா்கள் மேற்கொண்டுள்ளனா். இது எதிா்கால விண்வெளி திட்டங்களுக்கு மட்டுமன்றி மனிதகுல நலனுக்கு பல்வேறு வழிகளில் உதவும் என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரம் பயணித்து சா்வதேச விண்வெளி நிலையத்தை மறுநாள் சென்றடைந்தனா்.