ஆங்கிலப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா்.
ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, நடைபாதை, முதலைப் பண்ணை ஆலம்பாடி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா். மேட்டூா் அணையானது முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் நீா்த் தேக்கமடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதில் ஆா்வம் காட்டினா்.
காவிரி ஆற்றின் அழகைக் காண சின்னாறு பரிசல் துறையில் இருந்து பாதுகாப்பு உடை அணிந்து சுமாா் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் சென்று பாறை குகைகள், நீா்வீழ்ச்சிகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை அதிகரித்த போதிலும் அசைவப் பிரியா்கள் கட்லா, ரோகு, வாலை, கெளுத்தி, அரஞ்சான் , பாப்லெட், பாறை உள்ளிட்ட வளா்ப்பு வகை மீன்களை வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு ஒகேனக்கல் போலீஸாா் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து போக்குவரத்தினை சீா் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சுமாா் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.