ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆப்கானிஸ்தான் மக்களிடம் மகிழ்ச்சியை கொண்டுவர விரும்புவதாக ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 18) நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகும்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்காக ஆசிய கோப்பையை வெல்ல விரும்புவதாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிக அளவிலான மக்கள் உயிரிழந்தனர். அதனை நினைக்கும்போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அதிக அளவிலான வசதிகள் கிடையாது. அதனால், இதுபோன்ற துயரமான நிகழ்வுகள் மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்த ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றால், நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ஆசிய கோப்பையை வென்று எங்களால் முடிந்த சிறிதளவு மகிழ்ச்சியை அவர்களுக்கு தர விரும்புகிறோம் என்றார்.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், சுமார் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Afghan player Gulbadin Naib has said that he wants to bring happiness to the people of Afghanistan by winning the Asia Cup.
இதையும் படிக்க: இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!