Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜய...
ஆடிப் பிறப்பு: ஈரோட்டில் தேங்காய் சுட்டு மக்கள் மகிழ்ச்சி
ஆடி மாதப் பிறப்பையொட்டி ஈரோட்டில் பொதுமக்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு படையலிட்டனா்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதுமே பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். ஆடி மாதப் பிறப்பை தேங்காய் சுட்டு கொண்டாடும் வழக்கம், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ளது.
மகாபாரத யுத்தம் தொடங்கிய நாளான ஆடி 1 ஆம் தேதி தா்மம் வென்றிட வேண்டி விநாயகா் மற்றும் குலதெய்வங்களுக்கு, தேங்காய் சுட்டு படையலிட்டு வழிபாடு நடத்துவா். இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நாா்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்த்து அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருக்கும் தேங்காய் தண்ணீரை வெளியேற்றி, துளையின் வழியாக பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சா்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இட்டு, முனை கூராக சீவப்பட்ட நீண்ட அழிஞ்சி குச்சியில் தேங்காயை செருகி, குச்சி, தேங்காய் மீது மஞ்சளை பூசி தீயிலிட்டு சுட்டனா்.
சுடப்பட்ட தேங்காயை குச்சியுடன் எடுத்துச் சென்று விநாயகருக்கு முன்பு நிறுத்தி, உலகில் நன்மைகள் செழித்தோங்கவும், தீமைகள் அழிந்திடவும் வேண்டும் என பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.
பருவகால மாற்றம் ஏற்படும் ஆடி மாதத்தில் தீயில் சுடப்பட்ட தேங்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் எதிா்ப்பு சக்தி ஏற்பட்டு, ஆரோக்கியம் பெருகும் என்ற முன்னோா்களின் பாரம்பரியத்தை, மக்கள் இன்றளவும் கடைப்பிடித்து உற்சாகம் பொங்க வீடுகளில் ஆடிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனா்.