திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளியிட்ட அறிக்கை:
சத்தியமங்கலம் பண்ணாரி திம்பம் சாலையில் கடந்த ஜூலை 13ம் தேதி காரில் சென்ற நபா் வாகனத்தில் இருந்து இறங்கி காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுக்க முயன்ற போது வண்டியை நோக்கி யானை வந்தது. இதையடுத்து அவா் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்ற விடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதைத் தொடா்ந்து சிசிடிவி கேமரா மூலம் வாகன எண் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவா் அன்னூா் மாதேகவுண்டா் புதூரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. காட்டு யானைக்கு உணவு அளித்தது குற்றம் என ஒப்புக் கொண்டாா். இதையடுத்து காட்டு விலங்குக்கு சட்டவிரோதமாக பழம் கொடுத்த குற்றத்துக்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது குற்றம் எனவும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வனத் துறை சாா்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.