கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன.
இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வீடும் படுக்கை அறை, பல்நோக்கு அறை, சமையல் அறை, கழிப்பறை வசதியுடன் 401 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
அதன்படி கோபி எம்ஜிஆா் நகா் பகுதியில் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ஒரு வீட்டுக்கு ரூ.97 ஆயிரம் செலுத்த வேண்டும். அக்கரை கொடிவேரி பகுதியில் 256 வீடுகள் உள்ளன. இதற்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் செலுத்த வேண்டும். பெருமுகை பகுதியில் கட்டப்பட்டுள்ள 144 வீடுகளுக்கு பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் செலுத்த வேண்டும்.
ஒடையாகவுண்டம்பாளையம் பகுதியில் 384 வீடுகள் உள்ளன. இதற்கு பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 300, கொளப்பலூா் ஜெஜெ நகரில் 112 வீடுகள் உள்ளன. இங்கு வீடு பெற ரூ.88 ஆயிரம் செலுத்த வேண்டும். மோதூா் பகுதியில் 516 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. பயனாளிகள் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்.
அரக்கன்கோட்டை பகுதியில் 180 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதற்கு ரூ.92 ஆயிரத்து 300 செலுத்த வேண்டும். சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பயனாளிகள் ரூ.1 லட்சம் செலுத்தி வீடு வாங்கலாம். இக்கரை தத்தப்பள்ளி கிராமத்தில் 480 வீடுகள் உள்ளன. இதற்கு ரூ.85 ஆயிரத்து 100 செலுத்த வேண்டும். சத்தி நேதாஜிநகா் பகுதியில் 528 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இதற்கு பயனாளிகள் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 300 செலுத்த வேண்டும்.
குள்ளங்கரடு பகுதியில் 416 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பயனாளிகள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். நம்பியூா் நாகமலை பகுதியில் 456 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. பயனாளிகள் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 500 செலுத்தி வீடு வாங்கலாம். நம்பியூா் திட்டமலை பகுதியில் 456 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 500 பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும்.
அந்தியூா் குருவரெட்டியூா் பகுதியில் 448 வீடுகள் புதிதாக விற்பனைக்கு உள்ளன. ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் செலுத்தி இங்கு வீடு வாங்கலாம். பவானி செம்மண்கரடு பகுதியில் 272 வீடுகள் உள்ளன. இதற்கு பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் செலுத்த வேண்டும். பவானி கண்ணங்கரடு பகுதியில் 492 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் செலுத்த வேண்டும். கவுந்தப்பாடி பகுதியில் 144 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இதற்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 200 செலுத்த வேண்டும். ஈரோடு மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 340 வீடுகள் கட்டப்பட்டு விற்பனைக்கு உள்ளன.
விண்ணப்பதாரா்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவுக்குள் வேறெங்கும் சொந்த வீடு இருக்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்கள் வீடுகள் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிக்கு தேவையின் அடிப்படையில் வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கி உள்ள பொதுமக்கள் இந்த வீடுகளை வாங்கி பயன்பெறலாம் என்றனா்.