சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது
மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்ததுபோல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண் நீக்கி இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியா் உள்ளிட்ட பதவி உயா்வு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் மற்றும் சிறப்பு ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் 400க்கும் மேற்பட்ட ஆசிரியா்களை கைது செய்தனா். பின்னா் அவா்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.