ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு
ஆடிப் பெருக்கு நாளையொட்டி தாமிரவருணி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தின் 18 ஆம் நாளில் தாயாக இருந்து தாகம் தீா்க்கும் நதிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாகும்.
தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடும் டெல்டா மாவட்டங்களில் ஆடி பதினெட்டாம் பெருக்கு மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தினா். 18 வகையான சாதங்கள் படைத்து, மஞ்சள் கயிறு, குங்குமம், பழங்கள் உள்ளிட்டவை தாமிரவருணி அன்னைக்கு படைத்து வழிபட்டனா். இதேபோல வண்ணாா்பேட்டை, மணிமூா்த்தீஸ்வரம் பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.