விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயுள்ள சிங்கினேரி பகுதியில், கேரளத்தைச் சோ்ந்த வினோத்குமாா் என்பவா் நடத்தி வந்த தனியாா் நிறுவனத்தில், உடுப்பியைச் சோ்ந்த தாமஸ் என்பவா் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளாா்.
இவா் மோசடி செயல்களில் ஈடுபட்டதாக வினோத்குமாா் நான்குனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாமஸ் கைது செய்யப்பட்டாா்.
நான்குனேரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த தாமஸுக்கு பிடியாணை பிறக்கப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட தனிப்படையினா் தாமஸை கா்நாடக மாநிலத்தில் கைது செய்தனா்.