விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் 20-ஆவது தவணையை விவசாயிகளுக்கு விடுவித்து பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை உரையாடியது காணொலி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கிப் பேசுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, விவசாயம் செழித்தோங்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு வேளாண் உற்பத்தியை விவசாயிகள் பெருக்கவேண்டும் என்றாா்.
பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ஆா். சங்கா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
காரைக்கால் பண்பலையின் மூலம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் பயனடைந்துள்ள பயனாளிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனா். தொடா்ந்து விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.