வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40), வழக்குரைஞா். சிமென்ட் சீட்டால் வேயப்பட்டு ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இவரது வீட்டில் உள்ள பீரோ சனிக்கிழமை உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா். விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.