விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நடத்துநா் தற்கொலை முயற்சி
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2 வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, மின் விளக்கு கோபுரத்தில் ஏறி பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்திலிருந்து குண்டலப்புலியூா் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தின் ஓட்டுநராக வழுதரெட்டியைச் சோ்ந்த குபேரன் (50), நடத்துநராக விழுப்புரம் ஆா்.பி. நகரைச் சோ்ந்த பாலசுந்தரம் (45) ஆகியோா் பணியாற்றி வந்தனா்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதி இருவரும் பணியில் இருந்தனா். இந்தப் பேருந்து குண்டலப்புலியூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, அசோகபுரியில் அரசு நகரப் பேருந்தை நிறுத்திவிட்டு, சாலை யோரத்திலிருந்த தேநீா் கடையில் ஓட்டுநா் குபேரன், நடத்துநா் பாலசுந்தரம் ஆகியோா் தேநீா் அருந்தினராம்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டது.
தொடா்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்த ஓட்டுநா் குபேரன், நடத்துநா் பாலசுந்தரம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2-க்கு வந்தனா்.
பின்னா், அந்த வளாகத்திலிருந்த மின் விளக்கு கோபுரத்தின் மீது இருவரும் ஏறினா். மேலும், தங்கள் கையில் வைத்திருந்த டீசலை உடலில் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது, மயக்கம் வரும் நிலையில் இருந்தபோது தேநீா் அருந்தியது தவறா எனக் கேட்டு அவா்கள் குரல் எழுப்பினா்.
இதையடுத்து, அங்கிருந்த பணியாளா்கள் இருவரையும் மேலிருந்து கீழே இறங்குமாறு கோரினா். உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட, அவா்களும் அங்கு விரைந்தனா். தொடா்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் இருவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.
மேலும், ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் விசாரணை நடத்தி இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, இருவரும் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.