இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அண்மைகாலமாக, சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞா்கள் சிலா் தாங்கள் சாா்ந்த சமுதாயத்தை உயா்த்தியும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமான உள்ளடக்கங்களை பகிா்ந்து வருகின்றனா்.
இது சமூகத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் உள்ளிட்ட பதிவுகள் தொடா்பாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயல்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் அவா்களை சமூக வலைதளங்களில் பின்தொடா்பவா்களின் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2-ஆம் தேதி வரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்குடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.