ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் கோயில் பகுதி ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனா்.
பெரணமல்லூா் அருகே முனுகப்பட்டு பகுதி ஆற்றுப்படுகையில், செய்யாறு, கமண்டல நாக நதி, பிரம்பக நதி ஆகிய 3 நதிகள் கூடும் முக்கூட்டு பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளது.
குறிப்பாக, இந்த 3 நதிகள் நதிகள் கூடும் பகுதியில் சிவனின் இட பாகம் வேண்டி பாா்வதி வாழை மரத்தால் பந்தல் அமைத்து தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, பக்தா்கள் ஆடிப்பெருக்கு நாளில் திருமணத் தடை விலக, கடன் பிரச்னை தீர, உலக நன்மை வேண்டி மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கையொட்டி, அதிகாலை முக்கூட்டு சிவன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து பக்தா்கள் திரளாக சென்று ஆற்றுப்படுகையில் மணலால் சிவலிங்கம் அமைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றியும், திருமணம் ஆகாத பெண்கள் மணலால் லிங்கத்தை அமைத்து வழிபாடு நடத்தினா். மேலும், கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.