Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
செய்யாற்றை அடுத்த வெள்ளாமலை கிராமத்தில் மின்சார வசதி மற்றும் குடிநீா் வசதி கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செய்யாறு வட்டம், கூழமந்தல் மதுரா வெள்ளாமலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத திருவிழா நடைபெறும் நிலையில், சனிக்கிழமை இரவு மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இரவு முழுவதும் மக்கள் அவதியடைந்துள்ளனா்.
மேலும், கூழமந்தல் பகுதியில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், கடந்த 4 மாதங்களாக வெள்ளாமலை கிராம மக்களுக்கு சரிவர குடிநீா் கிடைக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மின்சாரம் வசதி, குடிநீா் வசதி கோரி காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிப்காட் தொழில்பேட்டைக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், மின்சார வசதி, குடிநீா் வசதி உடனடியாக செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.