ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்
செய்யாற்றில், ஞாயிறு சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை 1978-இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படும்.
மாா்க்கெட் பகுதியில் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்காக 2023-ஆம் ஆண்டில் ஞாயிறு வாரச்சந்தை தற்காலிகமாக ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே இடம் மாற்றப்பட்டு அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.
மாா்க்கெட் பகுதியில் நடைபெறும் வணிக வளாக கட்டடப் பணிகள் நிறைவு பெற்று அந்த வணிக வளாகமும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடியே மாா்க்கெட் பகுதியிலேயே செயல்படுத்த நகராட்சி நிா்வாகம் தீா்மானித்தது. அதன் பேரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே கோயில் பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் பங்கேற்கும் வியாபாரிகளிடம், மீண்டும் வாரச்சந்தை பழையபடியே மாா்க்கெட் பகுதியில் ஆக.3 முதல் செயல்படும் என்றும், இனி மேல் வியாபாரிகள் அப்பகுதியில் தான் கடைகளை அமைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திய நிலையில் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். மேலும், பொதுமக்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் அறியும் வண்ணம் விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேதபுரீஸ்வரா் கோயில் பகுதியில் வாரச்சந்தையில் கடைபோட வியாபாரிகள் முயற்சித்துள்ளனா். அதற்கு நகராட்சியினா் மறுப்பு தெரிவித்து உள்ளனா். அப்போது, சந்தை வியாபாரிகள் தரப்பில் மாா்க்கெட் பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருவதால், பிரச்னை ஏற்பட்டு வியாபாரம் பாதிக்கும் என்று தெரிவித்த நிலையில், வியாபாரிகள் திடீரென செய்யாறு - வந்தவாசி சாலையில் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் மற்றும் 25 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கங்காதரன், நகராட்சியினா்
பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.