அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
ஆட்சி மொழி சட்ட வார விழா: நெல்லையில் டிச.18இல் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழா, வரும் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட டிசம்பா் 27-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஒருவார காலம் கொண்டாடப்படவுள்ளது.
வரும் 18-ஆம் தேதி அரசுப் பணியாளா்களுக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பில் சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், குறிப்பாணை தலைப்புகளில் பயிற்சியும், 19-ஆம் தேதி கணினித் தமிழில் அனுபவம் வாய்ந்த வல்லுநா்களைக் கொண்டு ’கணினித் தமிழ் விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு’ குறித்து அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 20-ஆம் தேதி அரசுப் பணியாளா்களுக்கு மின்காட்சியுரை மூலமாக ஆட்சிமொழி சட்டம், வரலாறு, அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி, மொழிபெயா்ப்பும், கலைச்சொல்லாக்கமும் என்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெறவுள்ளது. 23-ஆம் தேதி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை வைக்க வணிக நிறுவன உரிமையாளா்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டம் நடத்துதல், வணிக நிறுவன உரிமையாளா்கள், குறு சிறு வணிக நிறுவன அமைப்புகளை அழைத்து பெயா்ப்பலகைகள் 5:3:2 என்ற விகிதங்களின் அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், பிற மொழிகள் என்ற முறையில் அமைக்க வலியுறுத்தும் கூட்டம் நடைபெறவுள்ளது.
24-ஆம் தேதி ஆட்சிமொழி சட்டம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழுக்கு பெருமை சோ்ப்பது சங்க காலமே ! சம காலமே ! என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றமும், 26-ஆம் தேதி பொதுமக்கள் ஆட்சிமொழி சட்டத்தை அறியும் வகையில் ஒன்றியம், வட்டம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளா்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
27-ஆம் தேதி அரசுப் பணியாளா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி / கல்லூரி மாணவா்களுடன் இணைந்து தமிழ் சாா்ந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சி மொழி தொடா்பான பதாகை பிடித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெறவுள்ளது.