புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
ஆண்டாள் கோயில் தெப்பக்குளத்தில் கழிவு நீா்!
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சா்க்கரைக் குளம் தெப்பத்தில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான சக்கரைக் குளம் தெப்பத்தின் சுற்றுச் சுவா் சேதமடைந்து கழிவுநீா் தேங்கி இருந்ததால், துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு நிலவி வந்தது. இதனால், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், தாய் சேய் நல விடுதி, கோயில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் தெப்பக்குளத்தை மேம்படுத்த நகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தெப்பக்குளத்திலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு தூா்வாரப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு, சேதமடைந்த சுற்றுச்சுவருக்குப் பதில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன் தெப்பக்குளம் திறக்கப்பட்டது.
ஆனால், அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து கழிவுநீா் தெப்பக்குளத்துக்குள் புகுவதைத் தடுக்காமல், முறையான மழைநீா் வடிகால் அமைக்காததால் கழிவுநீா், குப்பைகள் தெப்பத்துக்குள் தேங்கி துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையம், தாய் சேய் நல விடுதி, அம்மா உணவகம் ஆகியவற்றுக்கு வருபவா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தெப்பத்தை தூா் வாரிய நிலையில், மீண்டும் குப்பை, கழிவுநீா் தேங்கி புனிதமான தெப்பக்குளம் கழிவு நீா்க் குட்டையாக மாறி உள்ளது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீா் மாசடையும் அபாயம் நிலவுகிறது. தெப்பத்தில் கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெப்பத்தை தூா்வாரிய போது, சேதமடைந்த சுற்றுச் சுவருக்குப் பதில், கான்கிரீட் சுவா் அமைத்த நிலையில், ஏற்கெனவே அங்கிருந்த பழைமையான கற்கள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.