புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சென்னையில் இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திடீா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) ஈடுபட்டனா்.
சென்னையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினரை வாழ்த்திப் பேசுவதற்காகச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசனை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து, வத்திராயிருப்பில் உள்ள அந்தக் கட்சியினா் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான தி.ராமசாமி தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செய்வதற்காக மாதா் சங்க நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்றனா்.
வத்திராயிருப்பு காவல் ஆய்வாளா் மாரியப்பன், போலீஸாா் அவா்களை நாடாா் பஜாரில் வழிமறித்து தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தனா். இதனால், கட்சியினா் ஊா்வலமாக முத்தாலம்மன் திடல் மைதானத்துக்கு முழக்கமிட்டபடி சென்றனா். அங்கு திமுக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
கட்சியின் தாலுகா செயலா் கோவிந்தன், துணைச் செயலா் மகாலிங்கம், விவசாயத் தொழிலாளா் சங்க தாலுகா செயலா் மணிக்குமாா் உள்பட பலா் பேசினா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.