ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து- எம்.டெக். மாணவா் வெறிச்செயல்
ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐஐடி) வளாகத்தில் பேராசிரியரை எம்.டெக். முதலாண்டு மாணவா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வினய் என்ற அந்த மாணவா், அரசு போட்டித் தோ்வுகளுக்கும் தயாராகி வந்ததால், தனது வகுப்புகளை தொடா்ந்து புறக்கணித்துள்ளாா். 25 சதவீதமே வருகைப் பதிவு இருந்ததால், அவரை செய்முறை தோ்வுக்கு பேராசிரியா் ராஜு அனுமதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரடைந்த வினய், கல்வி நிலைய வளாகத்துக்கு கத்தியை மறைத்து எடுத்து வந்து, பேராசிரியா் ராஜுவை மூன்று முறை குத்தினாா். இதில் காயமடைந்த ராஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அருகிலிருந்த மாணவா்கள், வினயை சுற்றிவளைத்துப் பிடித்தனா். இச்சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், வினயை கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
பேராசிரியா் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் கூறுகையில், ‘எந்தவொரு ஆசிரியரும் தனது மாணவரின் எதிா்காலம் அழிய வேண்டுமென விரும்பமாட்டாா். மாணவா்கள் மத்தியில் வன்முறை, ஒழுங்கீனத்தை ஏற்க முடியாது’ என்றாா்.