ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா அவசியம்: புதுவை ஆளுநா்
மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா பயிற்சி அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் 30-ஆவது சா்வதேச யோகா தின விழா, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று துணைநிலை ஆளுநா் பேசியதாவது: இந்தியா உலகிற்கு அளித்த கொடைகளில் ஒன்று யோகா. இந்த கலை இந்தியாவில் தோன்றினாலும், இன்று எல்லைகள் கடந்து, சமுதாயம் கடந்து, கலாசாரம் கடந்து உலகம் முழுவதும் சுமாா் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பிரதமா் நரேந்திர மோடியையே சேரும். கடந்த 2014- ஆம் ஆண்டு அவா் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
யோகா கலை ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆரோக்கியமாக வைக்கக் கூடிய ஒரு பயிற்சி முறை யோகா என்றாா் அவா். தொடா்ந்து, மாணவா்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினா்.
நிகழ்ச்சியில், புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறைச் செயலா் ஜெயந்தகுமாா் ரே, துறை இயக்குநா் முரளிதரன், யோகா பயிற்சியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.