நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தா்னா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த விவசாயிகள், தரையில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியரகக் கட்டட நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தினா். பின்னா், மாவட்ட ஆட்சியா் சி.பழனியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது: விழுப்புரம் மாவட்டத்தில் பி.பி.டி. நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையத்தையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்குப் பதிலாக, 50 கிலோ மூட்டையில் கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் சி.பழனி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.