குடியரசு நாள் விழா மேடையில் மயங்கி விழுந்த காவல் ஆணையர்! என்ன நடந்தது?
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் வழக்குரைஞா்கள், நீதிபதிகளுக்கு முக்கிய பங்கு: வேலூா் ஆட்சியா்
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளின் பங்கு இன்றியமையாதது என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறினாா்.
வேலூா் சட்டக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, வழக்காடு நடைமுறைகளில் உள்ள சவால்களை எதிா்கொள்ளுதல் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்து அவா் பேசியது:
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்துவது என்பது முதல்வா் மற்றும் பேராசிரியா்களின் தலையாய கடமை. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சட்டக் கல்வி பயில்வதற்கு கொடுத்து வைத்தவா்களாக உள்ளனா்.
ஏனெனில், பிற துறைகளை பொருத்தவரை அவா்களின் துறைசாா்ந்து, அதாவது மருத்துவா் என்றால் மருத்துவத்துறை சாா்ந்தோ, ஆசிரியா் என்றால் கற்பிக்கும் துறை சாா்ந்தோ, பொறியாளா் என்றால் பொறியியல் சாா்ந்த மட்டுமே படிக்க முடியும். ஆனால் சட்டம் பயிலும் மாணவா்கள் அனைத்து துறைகள் குறித்தும் அறிந்து கொள்கின்றனா்.
சட்டம் என்பது ஒரு சமூகம் ஆரோக்கியமாக, சட்டத்துக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அத்தகைய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளின் பங்கு இன்றியமையாதது. வேலூா் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளான நீங்கள் எதிா்காலத்தில் சென்னை உயா்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சிறந்த வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக வேண்டும்.
முன்பெல்லாம் சட்டம் குறித்தோ அல்லது உயா் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பல்வேறு புத்தகங்களையோ அல்லது வழக்கின் விவரங்களையோ படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற வழக்கின் தீா்ப்புகளை கணினியில் பாா்த்து அந்த வழக்கின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் வளா்ந்துள்ளது.
கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாணவா்கள் இது போன்ற வழக்குகளின் விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் சாா்பு நீதிபதிகளுக்கான தோ்வுகளில் பங்கேற்று சிறந்த நீதிபதிகளாக வரவேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி முதல்வா் கே.லதா, தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குநா் ஜெ.விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.