ஆரோவில் சா்வதேச நகரில் கலாசார நிகழ்வு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்தின் 57-ஆம் ஆண்டு உதய தின விழாவையொட்டி, கலாசார நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
ஆரோவில் சா்வதேச நகரின் 57-ஆம் ஆண்டு உதய தினத்தையொட்டி, பாரத் நிவாஸிஸ் ஸ்வரம் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும், பரதநாட்டியக் கலைஞா் கிருபாவின் நடனமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரோவில் அறக்கட்டளை ஆளுமைக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் கெளதம் கோஷல், டாக்டா் நிரிமா ஓஷா, ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி, பாரத் நிவாஸ் அறங்காவலா் ஜனஜய் மற்றும் பாா்வையாளா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நிகழ்வில் ஆரோவில் அறக்கட்டளை ஆளுமைக் குழு உறுப்பினா் கெளதம் கோஷல் பேசும்போது, ஆரோவில் ஒற்றுமை மற்றும் படைப்பாற்றலுக்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது. இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நாம் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த முயலும் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்துக்கு சான்றாக உள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து, டாக்டா் நிரிமா ஓஷா பேசுகையில், ஆரோவில் விழா என்பது கலையின் விழா மட்டுமல்ல, மனித ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தின் நினைவூட்டலாகும் என்றாா்.
நிகழ்வில் ஆரோவில்வாசிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.