ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அளிப்பு
குமரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியை ஆட்சியா் ரா.அழகுமீனா வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 580 மனுக்களை பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி என்பவரது மகன் கிருஷ்ணராஜ் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியா் சேக் அப்துல் காதா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.