தற்காலிக சாலை அமைக்க வலியுறுத்தி பள்ளியாடியில் பொதுமக்கள் முற்றுகை
கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலையைத் துண்டிக்கும் முன்பு தற்காலிக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலிலிருந்து செங்கவிளை வரை நான்குவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இப்பணிக்காக கருங்கல் - இரவிபுதூா்கடை பிரதான சாலையில் பள்ளியாடி பகுதியில் சாலையைத் துண்டிக்கும் பணி திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தொடங்கியது.
அப்போது, வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சித் தலைவா் ஜான் டென்சிங் தலைமையில் நட்டாலம் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ராஜகுமாா், யகோவா, பொதுமக்கள் அங்கு திரண்டனா். இந்தச் சாலை துண்டிக்கப்பட்டால் தாங்கள் நீண்ட தொலைவு சுற்றி பள்ளியாடிக்கு வரவேண்டும். இதனால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவோம். எனவே, சாலையைத் துண்டிக்கும் முன்பு தற்காலிக சாலை அமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
தக்கலை போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில், தற்காலிக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.