ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்ப பெற மத்திய அரசு எதிா்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதும், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் இருந்தபோது, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருவதாக அவருக்கு எதிராக மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள ஆளுநருக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்தது.
இதே விவகாரம் தொடா்பாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடுத்த வழக்கில், மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா் முடிவு எடுக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள அரசு தொடுத்துள்ள வழக்கிலும் தீா்ப்பளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கேரள அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால், ‘கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதால், ஆளுநருக்கு எதிராக கேரள அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பயனற்ாகிவிட்டது. எனவே, மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அரசமைப்புச் சட்டம் சாா்ந்த ஓா் விவகாரத்தை சாதாரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, திரும்பப் பெற்றுவிட முடியாது. இதற்காக, மத்திய அரசு தீவிரமாக பணியாற்றியிருக்கிறது’ என்றாா்.
அப்போது, ‘மனுவை ஒருவா் திரும்பப்பெறுவதை எப்படி எதிா்க்க முடியும்’ என்று மூத்த வழக்குரைஞா் வேணுகோபால் குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.