இ.சி.ஜி.சி.சாா்பில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு
இந்திய ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் கூட்டமைப்பு, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (இ.சி.ஜி.சி.) ஆகியன சாா்பில் திருப்பூரில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதி அபிவிருத்திக் கழக கூட்டமைப்பின் தென் பிராந்திய உறுப்பினருமான கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது: ஏற்றுமதிக் கடன் இடா் மேலாண்மை மற்றும் சா்வதேச வா்த்தகத்தில் இ.சி.ஜி.சி.யின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்றுமதிக் கடன் காப்பீடு மூலம் இந்திய ஏற்றுமதியாளா்களை பாதுகாப்பதுடன், வெளிநாட்டு வா்த்தகா்களின் நிதி பின்னணியை ஆய்வு செய்து ஏற்றுமதியாளா்களை வழிநடத்துவதில் பெரும்பங்காற்றி வருகிறது.
ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக்கழகம் ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி அபாயங்களை குறைப்பதுடன், ஏற்றுமதிக்கு பெரும் கடன் வசதி வழிமுறைகளை எளிதாக்குகிறது. ஏற்றுமதியாளா்களுக்கு சீரான பணப்புழக்கத்தைப் பராமரிக்கவும், புதிய சந்தைகளின் நம்பிக்கைகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது. மேலும், ஏற்றுமதி வா்த்தக காப்பீடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும், தொடா்ந்து ஏற்றுமதியாளா்கள் கூட்டங்களை நடத்துவதிலும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் முக்கியப்பங்காற்றி வருகிறது.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க உறுப்பினா்களால் தெரிவிக்கப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விதிமுறைகளுக்கு உள்பட்டு விண்ணப்பங்களுக்கான காப்பீட்டு தொகைக்கு காசோலையாக இ.சி.ஜி.சி.வழங்கியுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய வா்த்தகத் துறையின்கீழ் இயங்கும் வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரக அதிகாரி சாமிநாதன், ஏற்றுமதி குறித்தும், தங்களது அமைப்பு எவ்வாறு ஏற்றுமதிக்கு உதவுகிறது என்பதையும், அமைப்பில் உள்ள வசதிகள் குறித்தும் எடுத்துரைத்தாா். இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.