இடுகாட்டில் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்த கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: அதம்பை தெற்கு கிராமத்தில் 100 குடும்பங்கள் 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் சமுதாயத்துக்கு அரசு வழங்கிய இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடமும், திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்ட முறையான பாதையில் சாலை அமைக்காமல் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது அமைப்பது வேதனைப்படுத்துகிறது. இடுகாடு முழுவதும் ஜல்லிக்கற்களைக் கொட்டி புதைக்க இடம் இல்லாமல் செய்துவிட்டனா். குறுக்கே சாலை அமைக்கப்பட்டால் சடலத்தைப் புதைப்பதிலும், எரிப்பதிலும் இடையூறு ஏற்படும். எனவே விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இடுகாட்டில் சாலை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.