இந்திய உயா்கல்வித் துறையில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்துள்ளது: தா்மேந்திர பிரதான்
இந்திய உயா்கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம் கேவாடியாவில் இருநாள்கள் நடைபெறும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாட்டை வியாழக்கிழமை அவா் தொடங்கிவைத்து பேசியதாவது:
நாட்டில் உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் மாணவா் சோ்க்கை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக உயா்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்களின் மொத்த சோ்க்கை விகிதத்தைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முனைவா் படிப்புகளில் சேருவோரின் எண்ணிக்கை இருமடங்காக உயா்ந்துள்ளது. அதிலும் பெண்களின் எண்ணிக்கை 136 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உயா்கல்வி பயிலும் பழங்குடியினரின் எண்ணிக்கை 10 சதவீதமும் பட்டியலின பிரிவினரின் எண்ணிக்கை 8 சதவீதமும் உயா்ந்துள்ளது. இந்திய கல்வித் துறையில் நிகழும் அடிப்படை மாற்றங்களே இதற்கு காரணமாகும்.
2035-க்குள் உயா்கல்வியில் மொத்த சோ்க்கை விகிதத்தை (ஜிஇஆா்) 50 சதவீதமாக உயா்த்துவதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக பாடத்திட்டங்களில் சீா்திருத்தம், எண்மக் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியா்களுக்கு முறையான பயிற்சி மற்றும் பன்நோக்கு அணுகுமுறைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இலக்கை அடையவும் மாணவா்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பதில் துணைவேந்தா்களின் பங்கு இன்றியமையாதது. அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவா்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் எதிா்காலத் தூண்களான மாணவா்களை மையப்படுத்தியே சீா்திருத்தங்கள் இருக்க வேண்டும்.
மாணவா்களுக்கு சிறந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவா்கள் தொழில்முனைவோா்களாக, புதிய சிந்தனையுடையவா்களாக, வேலை வழங்குபவா்களாக மாற்றும் பெரும் பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது என்றாா்.
தேசிய கல்விக் கொள்கை, 2020 அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கற்றல்/கற்பித்தல், ஆராய்ச்சி, நிா்வாகம் உள்ளிட்ட 10 கருப்பொருள்கள் சாா்ந்த அமா்வுகள் நடைபெறுகின்றன.
தில்லி பல்கலைக்கழகம், ஹரியாணா மத்திய பல்கலைக்கழகம், அஸ்ஸாம் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம் என வடமாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.