இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகரச் செயலா் ஆா். ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் ஆா். சொா்ணகுமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமித்து, போதுமான மருந்து, மாத்திரைகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.