துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்
இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு
தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக் குழு (டபிள்யூஎம்சிசி) கட்டமைப்பின்கீழ் சீன தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இப்பேச்சுவாா்த்தையில் இந்திய குழுவுக்கு கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் கௌரங்கலால் தாஸ், சீன குழுவுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சாா் விவகாரத் துறையின் இயக்குநா் ஜெனரல் ஹாங் லியாங் தலைமை தாங்கினா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டபிள்யூஎம்சிசி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான வகையில் நடைபெற்றது. எல்லைப் பகுதி நிலவரத்தை இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்தனா்.
இருதரப்பு உறவின் சுமுக வளா்ச்சிக்கு எல்லையில் அமைதி மிகவும் முக்கியமாகும். இந்த நோக்கத்திலான ராஜீய மற்றும் ராணுவ வழிகளை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இதன்தொடா்ச்சியாக, புது தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
எல்லை தாண்டிய நதிகள், கைலாஷ்-மானசரோவா் யாத்திரை உள்பட எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்தும் பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது.
கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில், பெய்ஜிங்கில் நடைபெற்ற 23-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த நடவடிக்கைகளையும் இரு தரப்பும் ஆய்வு செய்தனா் என்ற தெரிவிக்கப்பட்டது.
இப்பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக, ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்தனா். இதையடுத்து, பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே இந்தியா, சீன வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்துப் பேசினா்.
இதற்கிடையே, டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இருதரப்பு உறவில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது.