இந்திய தொழில் கூட்டமைப்பின் 2 நாள்கள் கண்காட்சி: புதுச்சேரியில் 29 -இல் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வரும் 29, 30-ஆம் தேதிகளில் உற்பத்தி சாதனங்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் பிராந்தியத் தலைவா் வி.சண்முகானந்தம் புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் புதுச்சேரியில் தொழில்துறை கண்காட்சி இண்டெக்ஸ்- 2024 மரப்பாலம் தனியாா் மண்டபத்தில் வரும் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில், புதுச்சேரியின் உற்பத்தித் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகள் இடம் பெறவுள்ளன. இதில், 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்துகின்றன.
புதுச்சேரி கண்காட்சிக்கு வெளிமாநில முதலீட்டாளா்கள் வருவதற்கான வாய்ப்பை இந்த கண்காட்சி ஏற்படுத்தும். புதுச்சேரியில் ஸ்கூட்டா் பேட்டரி பாக்ஸ், பெரிய நிறுவனங்களுக்கு தேவையான சாதனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான முக்கிய சாதனங்கள், வந்தே பாரத் ரயிலுக்கான மெட்டல் பாடி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவைதவிர, நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பிரபலமான அடையாளங்களுக்கான சாதனங்களும், சிறிய நிறுவனங்களுக்கானவையும் புதுவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கண்காட்சியை கல்லூரி மாணவா்களும் தொழில்நுட்ப நோக்கில் பாா்வையிடலாம். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவம் சாா்ந்த நிறுவனங்கள் புதுவையில் உள்ளன.
புதுச்சேரியில் தற்போது 3 பெரிய நிறுவனங்கள் சுமாா் ரூ. 400 கோடிக்கு மேல் உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்கின்றன. தற்போது கரசூரில் பரந்துபட்ட அளவீடு நடைபெறுகிறது.
அதன்படி, சென்னை இந்திய தொழில்நுட்ப மையம் (ஐஐடி) சாா்பில் 150 ஏக்கா் நிலம் கோரப்பட்டுள்ளது. அதில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனா். இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதுச்சேரியில் தற்போது 50-க்கும் மேற்பட்ட சிறு தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் உள்ளன. உலகளாவிய பெரிய தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க இடம், சாலை வசதி உள்ளிட்டவை புதுச்சேரியில் இல்லை. தமிழகத்தில் அமையும் தொழில்பூங்காவால் புதுச்சேரி தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான நிலையே ஏற்படும்.
புதுச்சேரி ஏஎப்டியில் சிறு ஐடி நிறுவனங்கள், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் அமைக்க அரசிடம் ஆலோசனை கூறியுள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஷமீா் காம்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.