இந்திய போல்வால்ட் அணி பயிற்சியாளராக இளம்பரிதி
தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) போட்டிக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக சேலம் பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரிய நாட்டின் பூசான் நகரில் சர்வதேச அளவிலான போல்வால்ட் போட்டி ஜூன் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணி சார்பில் சேலத்தைச் சேர்ந்த பவித்ரா வெங்கடேஷ், கெüதம் முருகேசன், தேவ்குமார் மீனா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்திய போல்வால்ட் அணியின் பயிற்சியாளராக முதன்முறையாக சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகள பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடும் தடகள வீரர்கள் 3 பேருடன் மேலாளர் சைலோ, பயிற்சியாளர் இளம்பரிதி ஆகியோரும் தென்கொரியாவுக்கு செல்லவுள்ளனர்.