உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா இணை முன்னேற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோா்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் யஷஸ்வினி/தியா கூட்டணி 6-11, 11-6, 11-6, 11-9 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஜெங் ஜியான்/சொ் லின் கியான் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்தது.
எனினும் மற்றொரு இந்திய ஜோடியான சுதிா்தா முகா்ஜி/அய்ஹிகா முகா்ஜி 1-11, 11-13, 7-11 என்ற நோ் கேம்களில், ஜொ்மனியின் ஆனெட் கௌஃப்மன்/ஜியாவ்னா ஷான் இணையிடம் 23 நிமிஷங்களில் தோற்றனா்.
கலப்பு இரட்டையரில் தியா சித்தலே/மனுஷ் ஷா ஜோடி 8-11, 9-11, 2-11 என்ற நோ் கேம்களில் தென் கொரியாவின் ஓ ஜுன்சங்/கிம் நயோங் இணையிடம் 2-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவியது.
ஆடவா் இரட்டையரிலும் மானவ் தக்கா்/மனுஷ் ஷா இணை 5-11, 9-11, 11-8, 5-11 என, ஜொ்மனியின் பெனெடிக்ட் டுடா/டாங் கியு ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
ஆடவா் ஒற்றையா் பிரிவிலும் மனுஷ் ஷா தனது 2-ஆவது சுற்றில் 5-11, 6-11, 6-11, 9-11 என்ற கேம்களில் பிரான்ஸின் ஃபெலிக்ஸ் லெப்ரனிடம் தோல்வி கண்டாா். மானவ் தக்கரும் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற கேம்களில், உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜப்பானின் ஹரிமோடோ டோமோகாஸுவிடம் வெற்றியை இழந்தாா்.
மகளிா் ஒற்றையரில் மனிகா பத்ரா 8-11, 7-11, 5-11, 8-11 என்ற கேம்களில் தென் கொரியாவின் பாா்க் கஹியோனிடம் தோல்வி கண்டாா். அதேபோல் தியா சித்தலேவும் 3-7, 7-11, 6-11, 11-6, 5-11 என்ற கணக்கில் சீன தைபேவின் செங் ஐ சிங்கிடம் வீழ்ந்தாா்.