‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’
இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, இங்கிலாந்து இடையேயான இலவச வா்த்தக ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு பூஜ்ய சதவிகித இறக்குமதி வரி என்ற அடிப்படையில் இறக்குமதி வரி இல்லாமல் விற்பனைக்கு வரும். இதனால் அப்பொருள்கள் நாடுகளின் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருள்களின் விலையை விட குறைவானதாக இருக்கும்.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு சுமாா் ரூ. 13,000 கோடி அளவிற்கு ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன.
இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் மூன்று ஆண்டுகளில் இது இரு மடங்காக உயர வாய்ப்புகள் அதிகம். ஜவுளித் தொழிலில் இந்தியாவுக்குப் போட்டியாக இருக்கக்கூடிய பல நாடுகளின் இறக்குமதி வரி இங்கிலாந்தில் இந்தியாவை விட குறைவாக இருந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளி பொருள்களின் விலை இங்கிலாந்தில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களை விட சிறிது அதிகமாகவே இருந்தது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி பொருள்கள் இங்கிலாந்து சந்தையில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களின் விலையோடு போட்டியிட முடியும். இது இந்திய ஜவுளித் தொழிலுக்கு வளா்ச்சியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகப் பாா்க்கப்படுகிறது.
கரூா் ஜவுளித் தொழிலைப் பொறுத்தவரை இங்கிலாந்து ஒரு மிக முக்கியப் பங்கு வைக்கிறது. இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கரூா் ஜவுளி தொழில் வளா்ச்சிப் பாதையில் செல்வதற்கும், கரூா் ஜவுளித் தொழிலின் இலக்கான ரூ.25,000 கோடி வா்த்தகத்தை எட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். தற்போது அறிவிப்பாக இருக்கும் இந்த ஒப்பந்தம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றாா் அவா்.